சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்து ! - TPV29
திருப்பாவையின் 29வது பாசுரம்
உன் மீது பற்று கொண்ட எங்களுக்கு மற்ற பொருள்கள் மீது இச்சை ஏற்படாமல் காப்பாயாக!
மலயமாருதம் ராகம், ஆதி தாளம்.
சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து* உன்-
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்*
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து *நீ-
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது*
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா*
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் *உன் தன்னோடு-
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்*
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்
பொருளுரை:
மிக்க விடியற்காலைப் பொழுதில் உன்னிடத்திற்கு வந்து உன்னை வணங்கி உனது தங்கத் தாமரை ஒத்த திருவடிகளை மங்களாசாசனம் செய்ய நாங்கள் வந்திருப்பதன் நோக்கத்தை நீ கேட்பாயாக ! மாடுகளை மேய்த்து அவை உண்ட பின் உண்ணுகின்ற குலத்தில் பிறப்பெடுத்த நீ எங்களின் பணிவிடைகளை ஏற்காமல் செல்லுதல் ஆகாது !
ஓ கோவிந்தனே ! இன்று உன் அருளை (பறை) பெறுவது மட்டும் எங்கள் விருப்பமன்று. என்றென்றும், ஏழேழு பிறப்புகளிலும் உன்னோடு பொருந்தியவராக, உனது நெருங்கிய உறவினராக நாங்கள் இருக்க அருள்வாயாக ! உனக்கு மட்டுமே அடிமை செய்பவராக நாங்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் ! இவற்றுக்கு மாறுபட்ட எங்கள் ஆசைகளை நீக்கி அருள வேண்டும் !
பாசுரச் சிறப்பு:
'நாராயணனே நமக்கே பறை தருவான்' என்று முதல் பாசுரத்தில் உரிமையோடு சொன்ன ஆண்டாள், இந்த 29-வது பாசுரத்தை, "எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் .... உனக்கே நாமாட் செய்வோம்" என்று தெளிவான நோக்கத்தோடு அறுதியிட்டு நிறைவு செய்கிறாள்!
எளிமையாகச் சொன்னால் -- பரமனிடம் அடியவர் கூட்டத்துடன் சரணாகதி, அவனுக்கு பல்லாண்டு பாடுதல், அவன் அருளும் மோட்சம், பின் சதாசர்வ காலமும் பகவத் சேவை -- இது தான் கோதையின் பிரபந்த சாரம்.
இந்த பாசுரம் பகவத் தாஸ்யத்தை (இறையடிமை செய்தல்) போற்றுகிற பாசுரம். பதினைந்தாம் பாசுரமான "எல்லே இளங்கிளியே" பாசுரத்தில் பாகவத தாஸ்யம் (அடியார்க்கு அடிமை செய்தல்) சொல்லப்பட்டது. இரண்டுமே, திருப்பாவைக்கு பெருமை சேர்க்கும் பாசுரங்களாக வைணவப் பெருந்தகைகளால் போற்றப்படுபவை.
ஆண்டாள் 29வது பாசுரத்தில், திருப்பாவை முடியும் தறுவாயில், "சிற்றஞ்சிறுகாலே" என்கிறாளே. அப்படியானால், அவள் (6-15 பாசுரங்களில்) கோபியர் ஒவ்வொருவராக துயிலெழுப்புகிறாளே, அக்காலை மிக மிக அதிகாலையாக இருந்திருக்குமே! அதாவது, இரவெல்லாம் தூங்காமல், விடியலுக்கு முன்னமே நோன்புக்கு வேண்டிய ஆயத்தங்கள் அனைத்தும் செய்து, கோபியர் கூட்டத்தை துயிலெழுப்பி, வாயிற்காப்பானைக் கெஞ்சி, ஆச்சார்யன் உபதேசமும் பிராட்டியின் கருணையும் பெற்று, விவேகம் சற்றே வாய்க்கப் பெற்று, செய்வன செய்யாதன புரிந்து, நோன்பை நெறி பிறழாமல் நிறைவு செய்து, மிக வருந்தி இவ்வளவு காரியங்கள் செய்தும், 'சிற்றஞ்சிறுகாலே' கண்ணனிடம் ஓடோடி வந்து விட்ட விஷயத்தை எவ்வளவு நயமாக கோதை நாச்சியார் நமக்கு குறிப்பில் உணர்த்தி விடுகிறாள், பாருங்கள்!
பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது --
கண்ணனைப் பார்த்து "(மேலே சொன்னபடி) மிகவும் கஷ்டப்பட்டு உன்னைச் சரணடைந்தேன். ஆகவே, உன் தாமரைத் திருவடிகளை போற்றுவதற்கான காரணத்தை நீ கேட்டே ஆக வேண்டும். நீ எங்கள் குலத்தில் வந்து உதித்தவன். அதற்காகவேனும், நான் சொல்ல வருவதை நீ கேட்டுக் கொண்டாக வேண்டும்!!! எனக்கும் வேறு கதியில்லை. என் குற்றேவலை நீ கொள்ளத் தான் வேண்டும்" என்று தன்னை ஒரு கோபியாக எண்ணிக் கொண்டு சூடிக் கொடுத்த நாச்சியார் குறிப்பால் சொல்வது நயத்திலும் நயம்!
"பொற்றாமரையடியே போற்றும்" என்று ஏகாரமாகச் சொல்லும்போது, வேறு ஒருவரையும் அண்டாமல், கண்ணன் திருவடிகளை மட்டுமே நாடி வந்தது குறிப்பில் உணர்த்தப்படுகிறது. இங்கு "குற்றேவல்" 'பரமனுக்கு தம் சக்திக்கு ஏற்ற அளவில் சேவை' என்பதை பொருளாகக் கொண்டுள்ளது.
'இற்றைப்பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா,
எற்றைக்கும் ஏழேழ்பிறவிக்கும் உந்தனோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்று'
ஆண்டாள் தான் வேண்டிய கண்ணனுடனான நெருக்கத்தையும், அவனுக்கு தொண்டு செய்து அவனை விட்டுப் பிரியாமல் இருக்கும்படியான தன் ஆசையையும், இதுவரை பூடகமாக 'பறை வேண்டும்' என்று தான் சொல்லி வந்தாள்! நோன்புக்கு "பறை வேண்டும்" எனபது பரமன் அருகே செல்ல ஒரு சாக்கு தான். இப்போது தெளிவாக தன் விருப்பத்தை முன் வைக்கிறாள். பரமபதத்தின் கடைநிலைக்கு வந்தாகி விட்டது, இனி பரமனோடு எந்தவித ஒளிவுமறைக்கும் அவசியமில்லை என்று கோதை நினைத்தாள்!
சென்ற பாசுரத்தில் "உன்னுடனான உறவைப் பிரிக்கவே முடியாது" (உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது!) என்று பாடியவள் இப்பாசுரத்தில் ஒரு படி மேலே போய், "கண்ணா! எக்காலத்திலும் (ஏழேழ் = 49 பிறவிகளிலும்!) நீயே எங்கள் உறவு, உனக்கு மட்டுமே நெருக்கமானவராக இருந்து கொண்டு, உனக்கு மட்டுமே ஊழியஞ் செய்து கொண்டு உடன் இருப்போம்! இதற்கு நீ அருள வேணும்! இந்த நோக்கத்திலிருந்து எங்கள் மனம் திரும்பாமல் இருக்கும்படியான வைராக்கியத்தை எங்களுக்கு அளிப்பதும் உன் சித்தமே" என்று கோபியர் சொல்வதாக கோதை நாச்சியார் சாதுர்யமாக எல்லா பொறுப்புகளையும் அப்பரமன் மேலேயே சுமத்தி விடுகிறாள் :-)
'எற்றைக்கும்' என்பது எக்காலத்திலும் (வைகுண்டத்தில் பகவத் சேவை செய்தல்)
'ஏழேழ் பிறவிக்கும்' எனும்போது, பரமன் பூவுலகிற்கு அவதாரமெடுத்து வரும்போதும், அவனுடனே வந்து தொண்டு செய்தல்! இலக்குமணனைப் போல, அனுமனைப் போல, பலராமனைப் போல, அச்சூழலில் எத்தனை பிறவி எடுக்கவும் கவலையில்லை! அதாவது, கணநேரமும் பிரியாதிருத்தல். அதனால் தான் ஆண்டாள் நயமாம "எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தனோடு" என்று பாடுகிறாள்!
'எல்லாம் உன்னாலேயே கிடைக்க வேண்டும், நீயே சரணம்' என்று கண்ணனிடம் சரணாகதி செய்கிறாள் ஆண்டாள்.
பாசுரச உள்ளுரை:
1. இப்பாசுரத்தில் (திருப்பாவையில்) மூன்றாவது முறையாக கோவிந்த நாமம் (இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா) எழுப்பப்படுகிறது. இதற்கு முன், 27வது பாசுரத்தில், "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா" என்றும், 28வது பாசுரத்தில் "குறைவொன்றும் இல்லாத கோவிந்தா" என்றும் பாடப்பட்டதை நினைவு கூர்க ! பொதுவாக, சங்கல்பத்தின் போது, "கோவிந்தா கோவிந்தா கோவிந்தா" (3 முறை) என்று சொல்வது மரபு. மேலும், 'கோவிந்தா' என்ற சொல்லினுள் 'கோதா' இருப்பதும் குறிப்பிடத்தக்கது !
2. இப்பாசுரத்துடன், கோதை நாச்சியார், கோபியர் பாத்திரத்தில் கிருஷ்ணனிடம் திருப்பாவையில் வேண்டுவதை முடித்துக் கொள்கிறார். கடைசி பாசுரத்தில் (வங்கக் கடல் கடைந்த மாதவனை), ஆண்டாளாகவே பாடி, திருப்பாவையை நிறைவு செய்கிறார் !
3. நோன்புக்காக பறை வேண்டுவதின் சரியான அர்த்தம் இப்பாசுரத்தில் வெளிப்பட்டுள்ளது. அதாவது
(i) உன் திருவடிகளில் கைங்கர்யம் செய்திருத்தல்
(ii) உன்னை விட்டுப் பிரியாதிருத்தல்
(iii) மேற்கூறிய இரண்டுக்கும் ஒவ்வாத ஆசைகளை / எண்ணங்களை நீக்க வேண்டுதல்
ஆகியவையே ஆகும்.
4. இப்பாசுரத்தில், சொரூப விரோதியும், பிராப்ய விரோதியும் விலகுவது சொல்லப்பட்டுள்ளது.
5. த்வயத்தின் முற்பகுதியான உபாய சொரூபம் சென்ற பாசுரத்தில் (கறவைகள் பின் சென்று) வெளிப்பட்டது. இதில், பிற்பகுதியான உபேய சொரூபம் (பரம்பொருள் வடிவம்) வெளிப்படுகிறது !
6. 'சிற்றஞ்சிறுகாலை'யே எம்பெருமானைக் குறித்த ஞானம் / பக்தி மிகும் சமயம் என்பதாலேயே, ஆண்டாள் அந்த நேரத்தை, பரமனைப் பற்றி வணங்க வெண்டிய பொழுதாகப் பாடியுள்ளார் என்று பெரியோர் உரைப்பர். ஹரிநாம சங்கீர்த்தனத்திற்கு உகந்த நேரமும் அதுவே !
7. போற்றும் - எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காது பல்லாண்டு பாடுதலைக் குறிக்கும்
8. குற்றேவல் செய்தல் - பரமன் இட்ட ஏவலைச் செய்தல், நம்மாழ்வார் கூறியது போல, 'ஒழுவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை' செய்தல் !!!
9. 'உன்றன்னோடு உற்றோமேயாவோம்' என்பது மூல மந்திரத்தில் பிரணவத்தையும், 'உனக்கே நாமாட் செய்வோம்' என்பது நாராயண சப்தத்தையும், 'மற்றை நம் காமங்கள் மாற்றேலோ' என்பது 'நம' சப்தத்தையும் உள்ளர்த்தங்களாகக் குறிக்கின்றன. ஆக, முழு வாக்கியமும் சேர்ந்து "ஓம் நாராயணாய நமஹ" என்ற அஷ்டாட்சர மந்திரத்தை குறிக்கிறது.
10. மொத்தத்தில், கோபியர் பரமாத்வான கிருஷ்ணனிடம் மோட்ச சித்தி ஒன்றை மட்டுமே பாவை நோன்பின் வாயிலாக வேண்டி வணங்கிக் கேட்கின்றனர்.
என்றென்றும் அன்புடன்
பாலா
*** 283 ***
9 மறுமொழிகள்:
Test comment !
Good post ...
நல்ல பதிவுகள். பாசுர விசேஷங்களையும் ஆழ்ந்த உட்பொருளையும் தந்து நன்கு பொருள் சொல்லியிருக்கிறீர்கள். மார்கழி மாதத்தில்
ஒவ்வொரு திருப்பாவை பாசுரத்தையும் உட்பொருளோடு படித்து ஆண்டாள் சொன்னதுபோல் 'மனத்தினால் சிந்தித்து' துதிக்க வைத்துவிட்டீர்கள்.
"சிற்றம்சிறு காலே வந்துன்னைச் சேவித்து " - இந்தப் பதம் மார்கழி மாதம் முழுவதையுமே குறிப்பதாகக் கொள்ளலாம். மார்கழி மாதம் முழுவதுமே அவனுக்கு சிற்றம் சிறு காலை (விடியற்காலை) அல்லவா?
ஏழேழ் பிறவிக்கும் உன் உறவை மட்டுமே வேண்டுவேன். அதற்குத் தடையாக எந்த எண்ணம் வந்தாலும் அதையும் நீயே மாற்ற வேண்டும்
ஜெயஸ்ரீ,
வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.
//ஏழேழ் பிறவிக்கும் உன் உறவை மட்டுமே வேண்டுவேன். அதற்குத் தடையாக எந்த எண்ணம்
வந்தாலும் அதையும் நீயே மாற்ற வேண்டும்
//
அதைத் தானே அனைவரும் வேண்ட வேண்டும் ! மற்றவையெல்லாம் மாயை தானே !
எ.அ.பாலா
***************************
test !
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தனோடு மற்றை யாதும் வேண்டாமே
நல்ல பதிவு அண்ணா
//எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் *உன் தன்னோடு-
உற்றோமே ஆவோம்//
என்ன அருமையான வரி!
உள்ளத்தால் விரும்பிய உணர்ச்சி உந்தினால் அன்றி இப்படி ஒரு கவிதை வெளிவருமா?
இந்தக் காலைப் பொழுதில், உங்களது வலைப்பூவிற்கு வந்து, இந்த அற்புதமான கட்டுரையைப் படித்துப் பெரிதும் மகிழ்ந்தேன். மனதிற்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது. மனமார்ந்த நன்றிகள் - சூரி
போட்டித் தேர்வுகளுக்கு குறிப்பெடுக்கும் நோக்கில் திருப்பாவை குறித்து தேடிக் கொண்டிருக்கும் போது தங்களது வலைப்பூவிற்கு வர நேர்ந்தது தங்களது சுய குறிப்பில் தாங்கள் ஒரு GCTian என்று குறிப்பிட்டு இருந்ததை பார்த்தவுடன் ஏதோ ஒரு பாசம் தொற்றிக்கொண்டது நானும் GCT இன் முன்னாள் மாணவன் என்ற பெருமை பொங்க இந்த பதிவு மிக்க நன்றி
Post a Comment